×

விசில் மத்தாப்பு, பலூன் பட்டாசு தீபாவளி பண்டிகைக்கு ரெடி

சிவகாசி: தீபாவளி பண்டிகையையொட்டி குழந்தைகள் முதல் பெரியோர் வரை குஷிப்படுத்த,  சிவகாசியில் பலவிதமான பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளன. வானில் வண்ணங்களை வாரி இறைக்கும், விசில் அடிக்கும், பலூன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகி வருகின்றன. பட்டாசு மற்றும் பட்சணங்களின் திருவிழா எனப்படும் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் சிவகாசியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி புதுப்புது பட்டாசு ரகங்களை அறிமுகம் செய்கின்றனர். பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்ததால், இந்தாண்டு தொடக்கத்தில் பட்டாசு தயாரிப்பு பணி மந்தகதியில் நடந்தது. இருப்பினும் பல ஆலைகளில் புது ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

தற்போது பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை இல்லையென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், சிவகாசியில் கடந்த சில நாட்களாக வெளியூர் வியாபாரிகள், பொதுமக்கள் பட்டாசு வாங்க அலைமோதுகின்றனர். குறிப்பாக, புது ரக பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குஷிப்படுத்த பலவகையான பட்டாசு ரகங்கள் அறிமுகமாகி உள்ளன. கம்பி மத்தாப்புகளில் சிகப்பு, பச்சை நிறம் தவிர்த்து நீல நிறத்திலும் ஜொலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளை குஷிப்படுத்தும்.

நடப்பாண்டு சிவகாசியில் அறிமுகம் செய்துள்ள பட்டாசு ரகங்கள் வருமாறு: கலிடோஸ்கோப்: இந்த ரக பட்டாசை பற்ற வைத்தவுடன் நூறு முறை அடுத்தடுத்து பேன்சியாக வெடிக்கும். பின்னர் மேலே சென்று பல வண்ணங்களில் வெடித்து தீயை உமிழும். இந்த பட்டாசு அதிக உயரத்தில் வண்ணஜாலம் காட்டுவதால், டெலஸ்கோப் மூலம் பார்த்து முழுமையாக ரசிக்கலாம். பனோரமா 500: இந்த பட்டாசு மின்னல் வேகத்தில் வானுக்கு பறந்து சென்று வண்ண ஜாலம் நிகழ்த்தும். சுமார் 30 நிமிடம் வரை வானில் வண்ணங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டே இருக்கும். பச்சை, சிவப்பு, பர்பிள், நீலம் ஆகிய வண்ணங்களில் ஒளியை சிந்தி வெடித்து, பரவசத்தை உருவாக்கும்.

பியூட்டி: இந்த பட்டாசை பற்ற வைத்தவுடன் மேலே சென்று அழகாக வெடித்து பல வண்ணங்களை வானில் தெளிக்கும். பளிச்சிடும் வெண்மை ஒளியை உமிழ்ந்து மறைவது அழகாக இருக்கும். இதனை பார்ப்போர் மனம் பரவசமடையும். பிளையிங் பலூன்: சிறுவர்களை குஷிப்படுத்தும் வகையில், இந்த பட்டாசு மேலே சென்று வெடித்து, பலூன்கள் போல பல வண்ணங்களில் கீழே இறங்கி வரும். இது சிறுவர்களை குஷிப்படுத்தும்.
விசிலிங் ஸ்பார்க்லர்: இந்த கம்பி மத்தாப்பில் சிகப்பு, பச்சை நிறங்களில் கலர் தீப்பொறிகளை கக்கியபடி, விசில் சத்தம் கேட்கும். இந்த மத்தாப்பு சத்தம் சிறுவர்களின் மனங்களில் புன்னகையை ஏற்படுத்தும். இதுபோல பலவித புதிய ரக பட்டாசுகளை உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Whistle Mawatha ,festival , Whistle Mawatha, Balloon Fireworks , Diwali festival
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...